மனப்பாண்மை என்பது நேர்மறை மனப்பாண்மை மற்றும் எதிர்மறை மனப்பாண்மை என இருவகையில் அமைகிறது. ஓர் உண்மை நிகழ்வை விளக்கினால் இன்னும் நன்றாகப் புரியும். இரண்டு கல்லூரி மாணவர்கள் அரக்கோணத்திலிருந்து திருத்தணியை நோக்கி இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். வழியில் கொடுமையான விபத்தை சந்திக்கின்றனர். மயக்கம் நீங்கி கண்விழித்து பார்த்த போது இருவரும் சென்னை பொதுமருத்துவமனையில்! பாவம்! இரண்டு பேரும் ஒருஒரு கையை இழந்து இருந்தனர்.
பத்து நாள் கழித்து நானும் எனது நண்பரான கல்லூரி பேராசிரியரும் சென்று அவர்களை பார்த்தோம். முதலில் சந்தித்த மாணவன் எங்களை பார்த்தவுடன் கதறி அழுதான். "ஐயா! ஒரு கை போய்விட்டதே! ஒரே ஒரு கையை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வேன்?" விபத்து நடந்து பத்து நாட்கள் முடிந்த பின்பும் அவனால் அந்த இழப்பை ஏற்க இயலவில்லை. அடுத்த மாணவனை சந்திக்க முதல் மாடிக்கு சென்றோம். அவன் நாங்கள் வந்திருப்பதை கூட கவனிக்காமல் இருக்கும் ஒரு கையில் "இருநகரக் கதை" என்ற சார்லஸ் டிக்கன்சால் எழுதப்பட்டு பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூலை படித்துக் கொண்டிருந்தான். எங்களுக்கு கோபம். அவனைப்பார்த்து "என்ன தம்பி! விபத்து நடந்து ஒரு கையை இழந்துள்ளாய்! கொஞ்சம் கூட கவலையின்றி படித்து கொண்டு இருக்கிறாயே?" என அவனிடம் கோபமாய் கேட்டோம். அந்த மாணவன் எங்களைப் பார்த்து, ஐயா! ஒரு கையாவது இருக்குதே ஐயா! இதுவும் இழந்திருந்தால் எனது நிலை என்ன?" என கூறினான்.
- ஒரு கையை இழந்து விட்டோமே? - எதிர்மறை மனப்பாண்மை
- ஒரு கையாவது உள்ளதே - நேர்மறை மனப்பாண்மை
- அப்பா, அம்மா படிக்கவில்லையே! - எதிர்மறை மனப்பாண்மை
- அப்பா, அம்மா படிக்கவில்லை என்றாலும் என்னை பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனரே - நேர்மறை மனப்பாண்மை
- தேர்வில் பத்து மதிப்பெண்கள் குறைந்துவிடுமே - எதிர்மறை மனப்பாண்மை
- தேர்வில் தொண்ணூறு மதிப்பெண்கள் வரும் - நேர்மறை மனப்பாண்மை
- தொடர் வண்டியில் உட்கார இடம் கிடைக்க வில்லையே - எதிர்மறை மனப்பாண்மை
- தொடர் வண்டியில் நிற்க தாராளமாய் இடம் கிடைத்துள்ளதே - நேர்மறை மனப்பாண்மை
- எதிர்மறை மனப்பாண்மை நம் தன்னம்பிக்கையை வலு குறையச் செய்யும்.
- நேர்மறை மனப்பாண்மை நம் தன்னம்பிக்கைக்கு வலு ஊட்டும்.
- எதிர்மறை மனப்பாண்மை இறந்த காலத்தில் கவனம் செலுத்தும்.
- நேர்மறை மனப்பாண்மை நிகழ்காலத்தில் மனதை குவியப்படுத்தும்.
- எதிர்மறை மனப்பாண்மை நடந்து முடிந்த நிகழ்வை ஏற்க மறுக்கும். குழப்பம் விளைவிக்கும்.
- நேர்மறை மனப்பாண்மை நடந்து முடிந்ததை அப்படியே ஏற்கும். அதன் அடிப்படையில் திட்டமிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக