காலம் நம்மை மேலாண்மை செய்யக் கூடாது. காலத்தை நாம்தான் மேலாண்மை செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் நல்ல நேரம் என எண்ணி பல மனிதர்களின் பல மணி நேரத்தை வீணாக்கும் பிற்போக்கு சமுதாய அமைப்பில் வாழ்ந்து வருகிறோம்.
முன்னேற வேண்டும், வாழ்வில் நல்லது நடக்க வேண்டும், வெற்றி கிட்டவேண்டும் என அனைவரும் விழைகிறோம். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படை காலத்தை செப்பமாய் பயன்படுத்துவதே!
காலம் தொடர்பான அடிப்படையான மூன்று விதிகள்.
1. காலம் அனைவருக்கும் பொதுவானது [ Time is common to all ]
2. காலம் அனைவருக்கும் இலவசமானது [ Time is free to all ]
3. காலம் உயிர் போன்றது [ Time is life ]
உயிர் போன்ற காலத்தை சிறப்புடன் நுட்பமாய் பயன்படுத்துவதிலையே வாழ்வின் வெற்றி உள்ளது!
காலம் அனைவருக்கும் பொதுவானது!
நிலம் அனைவருக்கும் பொதுவானது இல்லை.
முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாய் கிடைப்பது இல்லை.
உலக தரம் வாய்ந்த பள்ளிகளில் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கிறது.
வறுமை, சூழல், பெற்றோரின் இயலா நிலை காரணமாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பே பலருக்கு மறுக்கப்படுகிறது. வசதியான மாளிகையில் சிலர் பிறக்கின்றனர். போக்குவரத்து, மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள நகர்புற சூழல் சிலருக்கு கிடைக்கிறது.
இந்த வசதிகள் ஏதும் இல்லாத அல்லது குறைவாக உள்ள கிராமப்புறத்தில் பலர் வாழ்கின்றனர்.
மேற்கூறிய இவர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான்.
காலம் அனைவருக்கும் இலவசமானது
தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம்!
சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் காற்று கூட "தூய ஆக்சிஜன்" என்ற பெயரில் உருளையில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
ஆனால் காலம் நமக்கு இலவசமாய் கிடைக்கிறது. காலையில் எழுந்து கண்திறந்தால் இயற்கை அன்னை இந்தா என்று 24 மணி நேரத்தை நம் கணக்கில் இனிதாய் தருகிறாள்.
காலம் உயிர் போன்றது
காலம் பொன் போன்றது என்பது பழைய மொழி. பொன் விலை உயர்ந்ததுதான். ஆனால் நமக்கு நெருக்கடி ஏற்படும்போது மார்வாடிக் கடைக்கு செல்கிறது. பின்னர் வாய்ப்பு இருந்தால் மீண்டு வருகிறது. ஆனால் காலமும் உயிரும் சென்றால் திரும்புவது இல்லை. எனவே காலம் உயிர் போன்றது!
உயிரினும் மேலான காலத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வதிலேயே நமது வாழ்வின் வெற்றி அமைகிறது!
காலம் அறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் எழுதியுள்ள பத்து குறட்பாக்களையும் படித்து பின்பற்ற வேண்டும்.
காலத்தின் மேன்மையை உணர்ந்து சிறப்பாக செயல்படுபவரால் மட்டுமே வெற்றி அடைய இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக